தாய் இறந்த துக்கத்தில் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொம்மேபள்ளி கிராமத்தில் கோவிந்தசாமி-பவுனம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 6 மகன்களும், 6 மகள்களும் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் கணவன் இறந்த துக்கத்தில் பவுனம்மாள் சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் மகளான மங்கம்மாள் என்பவர் பவுனம்மாளை அழைத்து தனது வீட்டில் வைத்து கவனித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட பவுனம்மாள் திடீரென உயிரிழந்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மங்கம்மாள் தாய் இறந்த துக்கத்தில் கதறி அழுதுள்ளார். அப்போது அவரை சமாதானப்படுத்திய உறவினர்கள் சகோதரர் ஒருவர் வீட்டில் மங்கம்மாளை படுக்க வைத்துள்ளனர். இந்நிலையில் திடீரென மங்கம்மாள் அமைதியானதால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மருத்துவரை அழைத்து வந்து பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது தான் மங்கம்மாள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு தாய் இறந்த துக்கத்தில் 2 மணி நேரத்திலேயே மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.