மதுரை நத்தம் சாலையில் 7.3 கிலோ மீட்டர் தொலைவில், 694 கோடி ரூபாய் செலவில் மேம் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்த மேம்பாலம் இன்று மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என மொத்தம் 40 க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த மேம்பாலம் விபத்து ஏற்பட்டது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உரிய பயிற்சி அளிக்கப்படாமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் பணியில் பயன்படுத்திய இயந்திரங்களை முறையாக ஆய்வு செய்யாமல் இருந்துள்ளனர். பாலம் கட்டும் ஒப்பந்ததாரரிடம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும். மேம்பால பணியை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார் என்று அமைச்சர் கூறியுள்ளார்.