2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது நிலத்தில் விளைந்த பூக்களை பறித்துக் கொண்டு அதை விற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவரின் எதிரில் சரவணகார்த்திகேயன் மற்றும் அமர்நாத் ஆகியோர் தங்களின் மோட்டார் சைக்கிளில் கூகையூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கிராமத்தின் எல்லையில் வந்து கொண்டிருக்கும் போது இரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அமர்நாத் மற்றும் சரவணகார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அமர்நாத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து சரவணகார்த்திகேயனுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.