சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் சிவன்மலை அடிவாரம் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்ட் தொழிலாளியான நாகராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் திருப்பூர் பகுதியில் இரவு நேரம் முழுவதும் வேலை செய்துவிட்டு மறுநாள் காலையில் காங்கேயம் சாலை வழியாக சிவன்மலையில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது புதுப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது நாகராஜ் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நாகராஜ் பலத்த காயம் அடைந்தார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் நாகராஜை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த நல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.