நேற்று சட்டப்பேரவையில் நடந்த பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், விதி எண் 110ன் கீழ் இலங்கை வாழ் தமிழர்களுக்காக விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும், ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டப்படும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார். இதற்கு இலங்கை தமிழர்கள் உட்பட அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் தங்களுடைய நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களின் நலன் காக்க முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. வீட்டுவசதி, கல்வி ஆகியவற்றுக்காக ரூ.317.40 கோடி ஒதுக்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.