காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் பழனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அபிராமி என்ற மகளும், அரவிந்த் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்க்கும் அபிராமியை பார்ப்பதற்காக அரவிந்த் அங்கு சென்று வருவது வழக்கம். அப்போது அதே மருத்துவமனையில் பணிபுரியும் சிம்ரன் என்பவருடன் அரவிந்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மருவத்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இருவரின் குடும்பத்தினரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.