மர்மமான முறையில் கன்று குட்டிகள் மற்றும் ஆடு இறந்து கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை கிராமத்தில் விவசாயியான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான இரண்டு கன்று குட்டிகள், ஒரு ஆடு போன்றவை குடல் வெளியே வந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து சண்முகம் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மற்றொரு கன்றுக்குட்டி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடு, மாடுகளை கொன்ற விலங்கை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் துறையூர் பகுதியில் சுற்றி வந்த சிறுத்தை ஆடு மற்றும் கன்று குட்டிகளை கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அதனை பிடிப்பதற்கு கூண்டு மற்றும் வலையோடு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.