கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்தவர்களுக்கு இலங்கையைச் சேர்ந்தவர் உதவி செய்து வருகிறார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கடந்த 20ஆம் தேதி முதல் வரும் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பொருளாதார ரீதியாகவும் வேலை இன்றியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வருமானமின்றி தவிக்கும் மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஒருவர் உதவி செய்கிறார். அவர் கொழும்பில் உள்ள களனி பகுதியைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா ஆவார். ஏற்கனவே இவர் அரசியல் செயல்பாடுகளை செய்து வருவதாகவும் தொழிலதிபராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “இதற்காக ரூபாய் இரண்டரை கோடியை ஒதுக்கி உள்ளேன். இந்த திட்டத்தில் ஒரு நபருக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும். மேலும் மூன்று கொள்கலன் அரிசி மூட்டைகளை கொண்டு வந்து மக்களுக்கு வழங்கியுள்ளேன். இதனையடுத்து உலர் உணவுப் பொருட்களையும் விநியோகித்து வருகிறேன். இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற உதவிகளை செய்வேன்” என்று கூறியுள்ளார்.