மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஆறாவது முறையாக 30 லட்சம் மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் பண்ணா என்ற மாவட்டத்தை வைரத்தின் நிலமாக கருதுகின்றனர். இங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் மண்ணில் புதைந்து கிடப்பதாக கூறப்படுகின்றது. இதனால் இந்த மாவட்டத்தில் சிறுசிறு வைர குவாரிகளை உள்ளூர் விவசாயிகளுக்கு மாநில அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. அந்த குவாரிகளில் தோண்டி, அங்குள்ள விவசாயிகள் வைரங்களை தேடலாம். அப்படி வைரம் ஏதேனும் கிடைத்தால் அதனை மாவட்டம் சுரங்கத் துறை அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.
அதை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையில் அரசுக்கு உரிய கட்டணம், வரி போன்றவை போக அந்த நபருக்கு மீதி பணத்தை கொடுப்பார்கள். அப்படி ஜாருபூர் கிராமத்தில் அரசின் மூலம் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தில் பிரகாஷ் மஜூம்தார் என்ற விவசாயி 6.47 கேரட் மதிப்புள்ள உயர்தரமான வைரக்கல் ஒன்றைத் தோண்டி எடுத்துள்ளார் . இவருக்கு இதுதான் முதல் முறை கிடையாது. இதற்கு முன்னதாக ஐந்து முறை இதே போன்று வைரங்களை எடுத்துள்ளார். இதையடுத்து வைரம் ஏலத்திற்கு விடப்பட்டது. அந்த வகையில் பிரகாசுக்கு முப்பது லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இதனை அவர் தனது குவாரியில் பணியாற்றும் நான்கு பேருடன் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.