மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட செயலாளர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு துணைத்தலைவர் சங்கரசுப்பு, இணைச்செயலாளர் சுமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அதில் அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
மேலும் கடுமையான ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என கூறினர். இதனையடுத்து அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் அனைத்து நாட்களும் வேலை வழங்க வேண்டும் எனவும், தனியார் துறை வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஆட்டோ தொழிற்சங்கம் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.