மைசூரில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் மைசூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவி தனது காதலனுடன் சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் காதலனை அடித்துப் போட்டு விட்டு காதலியை இழுத்துச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அந்த மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மிகவும் சோர்வான நிலையில் உள்ளதால் அவரிடம் எந்த விசாரணையும் செய்யமுடியவில்லை. இதனால் அப்பெண்ணின் காதலரிடம் விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள மதுபான கடையின் கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். மாணவி கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய துப்பு கிடைத்தது. மேலும் மாணவி கற்பழிக்கபட்ட இடத்தில் பஸ் டிக்கெட் ஒன்று கிடந்தது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் அரசு பஸ்சில் பயணம் செய்த டிக்கெட் அது. இதையடுத்து குற்றவாளிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.
பிறகு துப்பாக கிடைத்த டிக்கெட் மூலம் மர்ம நபர்கள் தாளவாடியில் இருந்து சாம்ராஜ் நகருக்கு பயணித்தது தெரியவந்தது. சாம்ராஜ் நகரில் உள்ள செல்போன் கோபுரத்தை ஆய்வு செய்யும்போது இது உறுதி செய்யப்பட்டது. பிறகு தமிழ்நாட்டில் உள்ள தாளவாடி பகுதிக்கு சென்று பூபதி என்ற நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்த பிரகாஷ், ஜோசப், முருகேசன் மற்றும் 17 வயதுடைய ஒரு சிறுவன் என கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் சிறப்பாக செயலாற்றிய தனிப்படை போலீசாருக்கு ரூபாய் 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.