சென்னையில் மோசடி கும்பல் ஒன்று பெண்களை பயன்படுத்தி 1 வாரத்திற்குள் ரூ 25,00,000 மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மோசடி கும்பல் ஒன்று இனிமையான குரல்வளம் கொண்ட பெண்களை பயன்படுத்தி பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்த வட்டியில் அதிக பணத்தை கடனாக வாங்கித் தருவோம் என்று தெரிவிக்கிறார்கள். அந்த பெண்களின் பேச்சை உண்மை என்று நம்பி தனக்கு கடன் உதவி தேவைப்படுகிறது என்று யாரேனும் கூறும் பட்சத்தில் அந்தத் தொகையை நீங்கள் பெற வேண்டும் என்றால் உங்களது வங்கிக் கணக்கில் இருந்து குறைந்தபட்ச தொகையை நீங்கள் டெபாசிட் செய்யவேண்டும் என்று கூறுவார்கள்.
அதற்கும் ஒப்புக் கொண்டபின் உடனடியாக அவர்களது வாட்சப் எண்ணிற்கு விண்ணப்பப்படிவம் ஒன்றை அனுப்பி அதை நிரப்பி அனுப்புமாறு தகவல் பரிமாறப்படுகிறது. அதை நம்பி அவர்களும் விண்ணப்பத்தை அனுப்பியவுடன் அவர்களது ஆதார் எண் ஏடிஎம் கார்டு நம்பர் உள்ளிட்டவை வாங்கப்படுகிறது. பின் அவர்கள் எண்ணை மீண்டும் தொடர்பு கொண்டு ரகசிய குறியீடான ஓடிபி என்னையும் அவர்களிடமிருந்து பெற்று பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதன்பின் அவர்களுக்கு வங்கிக் கடனும் கிடைக்காமல், கொடுத்த பணத்தையும் திருப்பி பெற முடியாமல் அவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள்.
பணத்தைப் பறிகொடுத்த மக்கள் தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்து வர விசாரணையை தீவிரப்படுத்தினர் அதில் கடந்த ஒரே வாரத்தில் 100 பேரிடம் ரூபாய் 25 லட்சம் வரை அந்த மர்ம கும்பல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் தொடர்பு கொள்ளும் நம்பரை டிரேஸ் செய்து சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அலுவலகம் வைத்து அதில் போலியான கால்சென்டர் அமைத்து அதில் ஐந்து பெண்களை பணியமர்த்தி வேலை வாங்கி வருவது தெரியவந்தது. இதையடுத்து அலுவலகத்தில் அதிரடியாக சோதனை செய்த காவல்துறையினர் அங்கிருந்த 5 பெண்கள் உட்பட இரண்டு பேரை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
பின் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் சுமார் 1,500 பேரிடம் விண்ணப்ப மனுக்களை பெற்று விட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் பொதுமக்களிடம் செல்போனில் பேசிய பெண்கள் மாதம் ரூபாய் 10,000 சம்பளத்திற்கு வேலை புரிந்து வந்ததும் பணம் மொத்தத்தையும் நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டனே சுருட்டி உள்ளார் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதே சென்னையில் கோபி கிருஷ்ணன் என்பவர் உட்பட 19 பேரை இதே வழக்கில் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.