5 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்த வாலிபர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்த வேல்முருகன் என்பவர் தூங்கியவாறு எழுந்திருக்காமல் இருக்கையிலேயே இருந்துள்ளார். இது குறித்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற மருத்துவர்கள் வேல்முருகனை பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை அடுத்து வேல்முருகனின் உறவினர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மலேசியாவில் இருக்கும் சிகை அலங்கார நிலையத்தில் பணிபுரிந்து வந்த வேல்முருகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சொந்த ஊருக்கு வர முடிவெடுத்துள்ளார். ஆனால் விமானத்தில் வந்து கொண்டிருந்த போதே வேல்முருகன் இறந்து விட்டார். இவர் திருமணமான 2 மாதங்களிலேயே வெளி நாட்டிற்கு சென்று விட்டார். சுமார் ஐந்து வருடம் கழித்து வேல்முருகனை சடலமாக பார்த்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.