காபூல் நகரில், பல நாடுகள் மீட்பு நடவடிக்கையை முடித்ததால், தலிபான்கள் விமான நிலையத்தின் அதிகமான பகுதியை அடைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள், ஆப்கானிஸ்தானிலிருந்து, தங்கள் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை முடித்துவிட்டது. எனினும் தங்கள் நாட்டு மக்கள் உள்பட ஆப்கானிஸ்தானின் மக்களையும் கைவிட்டுத்தான் செல்கிறோம் என்பதையும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று நாட்டை தலீபான்கள் கைப்பற்றினர். அதன்பின்பு, ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் நபர்களை அங்கிருந்து மீட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
எனவே, பிரிட்டனும் நேற்று தங்கள் மீட்பு நடவடிக்கைகளை முடித்துக் கொண்டதாகவும் இனிமேல் ராணுவத்தினர் மற்றும் தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றுவதற்கு தான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்து விட்டது. தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி நாட்டிலிருந்து, வெளியேற பல்வேறு மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அனைத்து மக்களையும் மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
எனினும், அவர்கள் கைவிடப்படமாட்டார்கள். அந்த மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம், அவர்களுக்கு நாங்கள் உதவி செய்ய முடியும், ஆப்கானிஸ்தானின் அப்பாவி பொதுமக்களை யாராலும் மறந்து விட முடியாது. அவர்கள் அமைதியாக வாழ தகுதியுடையவர்கள் என்று கூறியுள்ளனர்.
பல நாடுகள் தங்கள் மீட்பு நடவடிக்கைகளை முடித்துக் கொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. எனவே, தலீபான்கள் விமான நிலையத்தின் அதிகமான பகுதியை, அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மேலும் விமான நிலையத்தின் வெளியில் தலிபான்களின் தலைவர்கள் நேற்று அதிகமான படைகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பின் அதிக மக்கள் கூட வேண்டாம் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.