மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியையும், உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். அதே நூற்பாலையில் வேலை பார்க்கும் 45 வயது பெண்ணிற்கும், சிவகுமாருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இந்நிலையில் கணவரை விட்டு பிரிந்து வாழும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சிவகுமார் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் மகளான 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக சிவகுமார் அந்த சிறுமியிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி சென்ற சிறுமியை சிவகுமார் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அதன் பின் அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்த போது அவரும் இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் அளித்த புகாரின் படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவகுமாரையும், அந்த மாணவியின் தாயாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.