செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர் பகுதியில் ரவுடியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு வயதில் குழந்தையும் இருக்கின்றனர். இவர் மீது காவல் நிலையங்களில் 7 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடாமல் மணிகண்டன் தனது வாழ்க்கையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிகண்டன் சின்னாண்டிமடம் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் இருக்கும் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் தன் மீது பொய்யான வழக்கு பதிந்து கைது செய்ய முயற்சிப்பதாக கூறி மணிகண்டன் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பின் சமாதானம் அடைந்த மணிகண்டன் கீழே இறங்கி வந்த பிறகு காவல்துறையினர் அவருக்கு ஆலோசனை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.