குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து வாகனம் மூலமாக பாலக்கோடு, பொன்னகரம், நல்லம்பள்ளி மற்றும் தர்மபுரி ஆகிய வட்டாரங்களில் ஒலிபெருக்கி மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என கலெக்டர் கூறியுள்ளார்.
அதன்பின் குழந்தை திருமணம் என்பது ஆணுக்கு 21 வயது மற்றும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையாத நிலையில் நடக்கின்ற திருமணம் என கலெக்டர் கூறியுள்ளார். இந்த குழந்தை திருமணத்தால் அந்தப் பெண் பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும் மற்றும் காவல் துறையினருக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். இந்த செயல்களில் ஈடுபட்டால் 1,00,000 ரூபாய் அபராதம் அல்லது 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இம்மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதை முற்றிலுமாக தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியுள்ளார்.