ஆப்கானில் பாதுகாப்பு மண்டலத்தை அமைக்கவேண்டும் என்று அதிபர் இமானுவேல் மேக்ரான் ஐ.நா.சபையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பாதுகாப்பு மண்டலத்தை அமைக்க வேண்டும் என்று பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஐ.நா. சபையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இதனை தற்பொழுது ஈராக்கில் உள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாக்தாத்தில் நடந்த செய்தி மாநாட்டில் பேசிய பொழுது தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்பு மண்டலத்தினால் தலீபான்கள் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். மேலும் உலக அளவில் அனைவருக்கும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறினார்.
இது குறித்து விரைவில் சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். குறிப்பாக பிரான்ஸ் அதிபர் வெளியேற்றம் குறித்து தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளரான அண்டனியோ குட்டரேஸ் ஆப்கானிஸ்தானின் உள்ள நிலைமை குறித்து பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக கூட்டு சந்திப்பு ஏற்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.