தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மற்றும் தென் மாவட்டங்களான திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 1 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப் 2, செப்-3 ஆகிய தேதிகளில் ஓரிரு உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இன்று (ஆகஸ்ட் 30) மற்றும் 31 ஆகிய தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.