சென்னை வேப்பேரியை சேர்ந்த தினேஷ் என்பவர் அதே பகுதியில் ஒப்பனை மற்றும் பேன்சி பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
அவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு அகமது என்பவர் நேரில் சந்தித்து தமக்கு தெரிந்தவரிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 100 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாகவும், அதை 500 மட்டும் 2,000 நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் இரண்டு விழுக்காடு கமிஷன் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். கூடுதல் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தினேஷும் 80 லட்சம் ரூபாய் பணத்துடன் நீலாங்கரை சன்ரைஸ் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார்.
அந்த வீட்டில் முனியாண்டி விக்னேஷ் டேவிட் என மேலும் சிலர் இருந்ததாக கூறப்படுகிறது. பணம் சரியாக இருக்கிறதா என்பதை எண்ணி பார்ப்பதாக கூறி அவர்கள் வீட்டின் பின்பக்க வாயில் வழியாக 80 லட்சம் ரூபாய் பணத்தோடு தப்பி ஓடிவிட்டனர். இதை அறிந்த தினேஷ் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதை அடுத்து அங்கு சென்ற நீலாங்கரை காவல்துறையினர் முகமது உட்பட இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் பணத்துடன் தப்பி ஓடிய கும்பலை தேடி வரும் காவல்துறையினர் ஹவாலா பணமாக இருக்கலாம் என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.