அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அட்லீ- ஷாருக்கான் இணையும் படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் புனே நகரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.