பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும். பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம். காலை 9:30 மணிக்கு தொடங்கும் வகுப்பு மாலை 3:30 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1முதல் 8 வரை வகுப்புகள் இல்லாததால் அந்த வகுப்புகளின் அறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.வகுப்பறை தோறும் சனிடைசர் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பறையின் மேசையில் ஒரு முனையில் ஒரு மாணவரும், மற்றொரு முனையில் ஒரு மாணவரும், அதாவது ஒரு மேஜையில் 2 மாணவர்கள் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மாஸ்க் போடாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலோ பள்ளியில் மாஸ்க் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.