தமிழகத்தில் நாளை 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.. இந்நிலையில் நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் ஆன்லைன் வழியாகவும் வகுப்புகளை கவனிக்க அனுமதிக்கும் வகையில் வழிகாட்டுதல் தரக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்..
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, நேரடியாக பள்ளி, கல்லூரிகளுக்கு வருமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுவார்களா? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது.. இதற்கு பதிலளித்த அரசு, தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் வகுப்புகளுக்கு நேரடியாக வர கட்டாயப்படுத்த மாட்டார்கள்
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கப்படும், இணைய வழியில் பாடங்கள் வகுப்புகள் பகிரப்படும். பல்துறை நிபுணர்கள் ஆலோசித்த பிறகே பள்ளிகள் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பில் கொரோனா தடுப்பு வழிமுறை முறையாகப் பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும். பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம். காலை 9:30 மணிக்கு தொடங்கும் வகுப்பு மாலை 3:30 மணிக்குள் முடிக்கப்படும்.
1முதல் 8 வரை வகுப்புகள் இல்லாததால் அந்த வகுப்புகளின் அறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். வகுப்பறை தோறும் சனிடைசர் வைத்திருக்க வேண்டும். வகுப்பறையின் மேசையில் ஒரு முனையில் ஒரு மாணவரும், மற்றொரு முனையில் ஒரு மாணவரும், அதாவது ஒரு மேஜையில் 2 மாணவர்கள் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மாஸ்க் போடாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலோ பள்ளியில் மாஸ்க் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது..