பேருந்து ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி இயக்கும் பேருந்து அரியமங்கலம் மேம்பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அம்பிகாபுரம் பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்ற வாலிபர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததால் நடத்துனர் அவரை மேலே ஏறி வரும்படி கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த சீனிவாசன் ராமசாமியை தாக்கியுள்ளார். இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் ராமசாமி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சீனிவாசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.