தற்கொலை செய்து கொண்ட கணவனின் உடலை வாங்குவதற்காக 2 மனைவிகள் போட்டி போட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள கீழமூங்கிலடி கிராமத்தில் கருணதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி மற்றும் புவனேஸ்வரி என 2 மனைவிகள் உள்ளனர். இதில் இருவருக்கும் தலா 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருணதேவனுக்கும், 2 மனைவிகளுக்கும் தினமும் குடும்ப பிரச்சனை காரணத்தினால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த கருணதேவன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து கீழே மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கருணதேவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து முதல் மனைவியான புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருணதேவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது பிரேத பரிசோதனை முடிந்து வந்த கணவனின் உடலை அவரது மனைவிகளிடம் காவல்துறையினர் ஒப்படைக்க வந்துள்ளனர். ஆனால் மனைவிகள் இருவரும் அவரின் உடலை நான் தான் வாங்க வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் ஆனந்த் மற்றும் துணை காவல்துறை சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் ஆகியோர் அவர்கள் 2 பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இதற்கு முடிவு காண முடியாததால் அதிகாரிகள் கருணதேவனின் உடலை அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்துள்ளனர்.