வாலிபரை தாக்கி 4 பேர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜா பேட்டை பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடுகளுக்கு கரையான் மருந்து அடிக்கும் வேலை பார்த்து வருகின்றார். அப்பகுதியில் செல்லையா நடந்து சென்ற போது மதுபோதையில் 4 வாலிபர்கள் அவருடன் தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் செல்லையாவை சரமாரியாக தாக்கியதோடு, அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த செல்லையாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன், ஸ்டீபன், ராஜ் போன்றோர் செல்லையாவை தாக்கி தங்க நகையை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு, தப்பியோடிய மற்றொரு நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.