2 ஆண்டுகளுக்கு முன் பாதியில் கைவிடப்பட்ட தார்சாலை அமைக்கும் பணிகளை தற்போது அதிகாரிகள் தீவிரபடுத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள முருக்கோடை கிராமத்தில் இருந்து காமராஜபுரம் வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் சாலை அமைக்கும் பணிக்கு வருசநாடு வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணிகள் முழுவதும் 2 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் காமராஜபுரத்திற்கு செல்லும் அரசு பேருந்து வசதிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது.
இதனையடுத்து சரியான பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளை மீண்டும் துரிதப்படுத்தி காமராஜபுரம் வரை செல்லும் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பாதியில் கைவிடப்பட்ட சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் கடந்த மாதம் அனுமதி அளித்துள்ளது. தற்போது தார்சாலை அமைக்கும் பணிகளை தீவிரபடுத்தி வருகின்றனர்.