தலிபான்களின் முக்கிய தலைவரான, ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டேனக்சாய் இந்திய நாட்டுடன் உறவை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் பேசியிருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை மொத்தமாக தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தான் நாட்டுடன் இந்தியாவிற்கு நல்ல நட்புறவு இருந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்தியா பல்வேறு திட்டங்களையும் மேற்கொண்டிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஆதரவுடன் இயங்கும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தானின் உறவு எப்படி இருக்கும் என்ற பதற்றம் ஏற்பட்டது.
இது தொடர்பில் கட்டாரில் உள்ள தலீபான் துணைத் தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டேனக்சாய் கூறுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டை பொறுத்தமட்டில், இந்தியா மிக முக்கிய நாடாக உள்ளது. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் வர்த்தக உறவுகளை இந்தியாவுடன் முன்பு போன்றே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். புதிய ஆட்சி அமைந்தவுடன், இந்திய நாட்டுடன் உறவை மேம்படுத்துவது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.