மோட்டார் சைக்கிள்களை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் வசிப்பவர்கள் புதுக்காட்டில் உள்ள பனியன் நிறுவனங்கள் முன்பு வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் ஒருவர் சைடு லாக் போடப்பட்டுள்ளதா என நோட்டமிட்டு செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில் அவர் வேலம்பாளையம் பகுதியில் வசிக்கும் ஆனந்தராஜ் என்பதும், இவர் திருப்பூர் மாநகர பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி செல்லும் இருசக்கர வாகனத்தில் சைடு லாக் போடப்பட்டுள்ளதா என நோட்டமிட்டு சென்று திருடி வருவதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்தராஜை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.