சென்சார் கருவி வெடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.டி.ஆர். நகரில் தனியார் வீட்டு மனை அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 23 – ஆம் தேதியன்று தனியார் நிறுவனம் சார்பில் ஆழ்குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்த போர்வேல் எந்திரத்தை ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் சாம்ப்ரோ என்பவர் இயக்கியுள்ளார். அப்போது எந்திரத்தில் உள்ள சென்சார் கருவி திடீரென வெடித்து சாம்ப்ரோவின் மீது விழுந்து விபத்து நேர்ந்துள்ளது.
இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் சாம்ப்ரோவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் சாம்ப்ரோவிற்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன் பிறகு தனியார் ஆழ்குழாய் நிறுவன மேலாளரான சஞ்சீவி என்பவர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.