குப்பையில் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் கிடந்துள்ள சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பார்ப்பரம்மாள்புரம் பகுதியில் அந்தோணி விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்கு பின்புறம் குப்பை கொட்டும் இடத்தில் அருகில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ஏ.டி.எம். கார்டு போன்ற ஏராளமான அட்டைகள் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த சிறுவர்கள் அந்தோணி விஜய்யிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். இதனையடுத்து அந்தோணி விஜய் கிராம நிர்வாக அலுவலர் ஜெபஸ்டினுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர் அப்பகுதியில் ஆய்வு செய்தார். அதில் அவை அனைத்தும் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் இசக்கி பாண்டியன், வருவாய் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து வடக்கு விஜயநாராயணம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் குப்பையில் கிடந்த அரசு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இவை அனைத்தும் காடன்குளம்-திருமலாபுரம் பஞ்சாயத்து பொதுமக்களுக்கு வழங்கப்படவேண்டிய அட்டை என்பதும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஊராட்சி மன்றம் சார்பில் அட்டைகளை பெற்று பொதுமக்களுக்கு வழங்கி இருக்க வேண்டியவை என்பதும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்