அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடுவதினால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிர கனமழை பெய்து வருகின்றது. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதில் இரண்டு அணைகளில் இருந்தும் கூடுதலாக தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் தற்போது 16 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் சீனி பால்ஸ், ஐந்து அருவி மற்றும் மெயின் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவது தடுக்க காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் காவிரி கரையோர பகுதிகளில் காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.