Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. காதலனுடன் சென்ற இளம்பெண்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விஷம் குடித்துவிட்டு காதலனை கரம் பிடித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பருவாச்சி அம்மன் பாளையம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சரண்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் என்ஜினீயரிங் பட்டதாரியாக இருந்துள்ளார். இதேபோன்று தளவாய்பேட்டை பகுதியில் வெங்கடாசலம் மகன் கார்த்திக் என்பவரும் என்ஜினீயரிங் பட்டதாரியாக இருக்கின்றார். இந்நிலையில் சரண்யாவும், கார்த்திக்கும் ஒரே கல்லூரியில் பயின்று வந்த நிலையில் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதல் வந்தது.

இதனையடுத்து 2 பேரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சரண்யா தனது காதலன் கார்த்திக்கை திருமணம் செய்து கொள்வதாக தந்தை கிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். ஆனால் சரண்யாவின் பெற்றோர் கார்த்திக் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதனால் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 28-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதனைதொடர்ந்து இருவரும் அங்கிருந்து பேருந்தில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது சரண்யா திடீரென்று வாந்தி எடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக், சரண்யாவிடம் கேட்டபோது திருமணத்திற்கு முதல் நாள் தான் விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பின் கார்த்திக் சரண்யாவை பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மேலும் மேல் சிகிச்சைக்காக சரண்யா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சரண்யாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டும் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |