ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோராசன் பிரிவினருக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்ப பெறப்பட்டதை அடுத்து அங்கிருந்த பிரித்தானியப் படைகளும் வெளியேறின. இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒரு பிரிவான கோராசன் அமைப்பினரால் பிரித்தானியா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று அந்நாட்டின் விமானப் படைத் தலைவர் Sir Mike Wigston தெரிவித்துள்ளார். மேலும் காபூலில் தற்கொலை படை தாக்குதலில் இரண்டு பிரித்தானியர்கள் உட்பட சுமார் 200 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கோராசன் பிரிவினர் தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் பலர் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு சிறையில் இருந்து விடுதலையானவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பில் சுமார் 2௦௦௦ பேர் இருக்கலாம் என்று அமெரிக்கா ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் கோராசன் பிரிவினர் எங்கு செயல்பட்டாலும் அவர்களுக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று பிரித்தானியா வெளியுறவுச் செயலாளரான Dominic Raab கூறியுள்ளார்.