சட்டவிரோதமாக சந்தனம் மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த குற்றத்திற்காக 8 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கோதுமலை வனப்பகுதியில் மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தி செல்வதாக மாவட்ட வன அலுவலர் கவுதம், ஆத்தூர் உதவி வன பாதுகாவலர் முருகன் போன்றோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள இரட்டைப்பாலி என்ற இடத்தில் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு இருந்த ஒரு கும்பல் வனத்துறையினரை கண்டு தப்பி செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் வனத்துறையினர் அந்த கும்பலை மடக்கி பிடித்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அவர்கள் அருநூற்றுமலை பொலாப்பாடி பகுதியைச் சேர்ந்த ராஜாமாணிக்கம், கந்தசாமி, பெரியசாமி, பழனிச்சாமி, சிவன், ராமச்சந்திரன், மூர்த்தி, கந்தசாமி போன்றோர் என்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின்படி 8 பேருக்கும் தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.