தையல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள வேங்காம்பட்டி நடுத்தெருவில் தையல் தொழிலாளியான மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவி இருக்கிறார். இவர் சேலம் புது பேருந்து நிலையத்தில் உள்ள எலக்ட்ரானிக்கல் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கீர்த்தனா, சரண்யா, பவித்ரா, தீபிகா என்ற 4 மகள்களும், தீபன் சக்கரவர்த்தி என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களில் 3 மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், மாதேஸ்வரன் தனது மனைவி ராதா, கடைசி மகளான தீபிகா மற்றும் மகன் தீபன் சக்கரவர்த்தி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாதேஸ்வரன் தினசரி மது குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து ராதா சேலம் குகை பகுதியில் உள்ள தனது மூத்த மகள் கீர்த்தனாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரைப் பார்ப்பதற்காக சென்று அங்கே தங்கி இருந்தார். இதற்கிடையில் இரவு வழக்கம் போல் மாதேஸ்வரன் குடித்துவிட்டு தனது மனைவி அங்கு இல்லாததைக் கண்டு மகன் மற்றும் மகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அம்மா இப்போது வர முடியாது நாளைக்கு தான் வருவார்கள் என மகன், மகள் இருவரும் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த மாதேஸ்வரன் வீட்டிற்கு சென்று கதவை உள்புறமாக தாழ்பாள் போட்டுக்கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தீபிகா, தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் கத்திக் கூச்சலிட்டனர். இதனைத்தொடர்ந்து அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து மாதேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாதேஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.