லாரி மீது அரசு விரைவு பேருந்து மோதியதில் 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள சம்பேரி பெட்ரோல் விற்பனை எதிரில் சாலையோரம் ஒரு டேங்கர் லாரியும், அதற்கு அருகில் சிமெண்ட் பாரத்துடன் ஒரு லாரியின் நின்றுகொண்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது உரசியதோடு, சிமெண்ட் பாரத்துடன் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதனால் அரசு பேருந்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு இம்மானுவேல் ஞானசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரன், கோபால் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அரசு பேருந்தை பொக்லைன் எந்திரத்தின் மூலம் மீட்டனர். இந்த விபத்தில் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்த்த அரசு விரைவு பேருந்து டிரைவர் பழனிச்சாமி, பேருந்து கண்டக்டர் மாதையன், பயணிகள் வீரநாராயணன், ரமேஷ், கீதா, பவித்ரா, சித்ரா அலெக்சாண்டர், ஞானபிரகாஷ், மணிகண்டன், அசோக்குமார், வள்ளல்பெருமாள் மற்றும் அமுல்தாஸ் உட்பட 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.