ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பயிற்சி மருத்துவரை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் பகுதியில் ஸ்ரீராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீராம் உட்பட 5 பயிற்சி மருத்துவர்கள் வால்பாறை பகுதியில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு சோலையார் அணைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் ஸ்ரீராம் அடித்து செல்லப்பட்டதை பார்த்ததும் நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் ஸ்ரீராமை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீராமை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீராமுக்கு நீச்சல் தெரியும் என்பதால் ஆற்றில் இருந்து வெளியேறி வனப்பகுதியில் சிக்கித் தவிக்க வாய்ப்பு இருக்கின்றது. எனவே ஸ்ரீராமின் பெற்றோர் ஒலிபெருக்கியின் மூலம் சுமார் 2 மணிநேரம் ஸ்ரீராம் என்று அழைத்தும் அதில் பயனில்லை. தற்போது 2-வது நாளாக ஸ்ரீராமை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.