மதுரை சீட்டாலாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர், நேற்று நள்ளிரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல், ரஞ்சித் குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அவருடைய பிறப்புறுப்பைத் துண்டித்துள்ளனர்.படுகாயமடைந்த ரஞ்சித் குமார் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ரஞ்சித் குமார் தனது மனைவி சுபாவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடால் பிரிந்துசென்றுள்ளார் எனவும் பிரிந்துசென்ற ரஞ்சித் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த சுபா அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், பாப்ளி உள்ளிட்ட மூன்று இளைஞர்களின் துணையோடு கணவரைக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.தற்போது சுபா உட்பட நான்கு பேரை எஸ்.எஸ்.காலனி காவல் துறையினர் தேடிவருகின்றனர். தன்னை பிரிந்துசென்ற கணவரை மனைவியே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.