விசாரணைக்கு செல்ல பயந்து ஊழியர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டி ஹால் ரோட்டில் நகை பட்டறை உரிமையாளரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் ஸ்ரீதரன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் 1 கிலோ எடையுடைய 35 தங்க சங்கிலிகளை கூடுதல் வேலைப்பாடுகள் செய்வதற்காக ஸ்ரீதரனிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலை ஸ்ரீதரன் வேலைக்கு வராததால் செல்வராஜ் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதால் தங்க நகைகள் மாயமாகி விட்டதாக ஸ்ரீதரன் செல்வராஜிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணைக்காக ஸ்ரீதரனை அழைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணைக்கு செல்ல அச்சத்தில் இருந்த ஸ்ரீதரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஸ்ரீதரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் உண்மையிலேயே தங்க நகை தொலைந்து போனதா அல்லது ஸ்ரீதரன் மோசடி செய்தாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.