Categories
தேசிய செய்திகள்

ராம ஜென்ம பூமி வழக்கு கடந்துவந்த பாதை…!

அயோத்தி ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கு கடந்துவந்த பாதையை சுருக்கமாக இங்கு காணலாம்.

பாபர் மசூதி

1528ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் பாபரின் படைத்தளபதி மிர் பாஹி பாபர் மசூதியை கட்டினார்.

1859ஆம் ஆண்டு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆங்கிலேயர்கள் முள்வேலி அமைத்து அப்பகுதியை இரண்டாக பிரித்தனர். அதன்படி உள்பிரகாரம் இஸ்லாமியர்களாலும் வெளிபிரகாரம் இந்துக்களாலும் பயன்படுத்தப்பட்டுவந்தது.

ராமர் சிலை

1885ஆம் ஆண்டு மகந்த் ரகுபர்தாஸ் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது.

1949 ஆம் ஆண்டு ராமர் சிலை மீண்டும் நிறுவப்பட்டது.

வழக்கு
1950 ஆம் ஆண்டு கோபால் சிம்லா விஷாரத் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஃபைசாபாத் நீதிமன்றம், ராமர் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கியது.

1950ஆம் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், ராமர் கோயிலில் வழிபாடு தொடர வேண்டும், சிலைகளும் அங்கேயே இருக்க வேண்டும் என கூறப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவு

1959 ஆம் ஆண்டு நிர்மோகி அகரா (இந்துக்கள் குழு) சார்பாக நிலத்தை கொடுக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

1981ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் சன்னி வக்பு வாரியம் சார்பாக நிலம் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

1986ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி இந்துக்கள் வழிபட உள்ளூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆகஸ்ட் 14, 1989ஆம் ஆண்டு நிலத்தை பராமரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆட்சிக் கலைப்பு

1992 டிசம்பர் 6ஆம் தேதி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி கட்டட அமைப்பு இடிக்கப்பட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் கலைத்தார்.

1992 டிசம்பர் 16ஆம் தேதி 10 நாள்கள் கழித்து பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ். லிபர்கன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

மத நிகழ்ச்சிகளுக்கு தடை

1993 ஏப்ரல் 3ஆம் தேதி சர்ச்சைக்குரிய இடத்தை அரசு எடுத்துக் கொள்ளும் விதமாக ‘அயோத்தியா சட்டம்’ கொண்டுவரப்பட்டது.அதே ஆண்டு இது தொடர்பாக பல வழக்குகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

1997 செப்டம்பரில் பாபர் மசூதி இடிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் பாரதிய ஜனதா மூத்தத் தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.

2001ஆம் ஆண்டு விஷ்வ இந்து பரிஷத் நடத்திய பேரணியில் ராமர் கோயில் கட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து 2002 பிப்ரவரி 4ஆம் தேதி இடைக்கால நிவாரணத்துக்காக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அயோத்தியில் மத அமைப்புகளின் நிகழ்ச்சிகள் அயோத்தியில் தடைசெய்யப்பட்டது.

குஜராத் கலவரம்

2002 பிப்ரவரி 6ஆம் தேதி அயோத்தியிலிருந்து குஜராத்துக்கு கரசேவகர்கள் சென்ற ரயிலில் கோத்ரா என்ற இடத்தில் 59 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து நடந்த கலவரத்தில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

2002 ஏப்ரல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு அயோத்தியா யாருக்கு என்பதை தீர்மானிக்கும் வாதத்தை தொடங்கியது.

வாஜ்பாய் முயற்சி

2002 ஜூன் மாதம் இந்து- இஸ்லாமிய தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நடவடிக்கை எடுத்தார்.

2003 மார்ச் 13ஆம் தேதி, அஸ்லாம் என்ற ‘புரே’ வழக்கில் மத நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடுத்த நாள் சமூக ஒற்றுமையை காக்கும் விதமாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றம் யோசனை

2009 ஜூன் மாதம், லிபர்கன் ஆணையம் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.

2010 செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நிலம் 2:1 பங்காக பிரித்துக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2011 மே 9ஆம் தேதி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.

சுப்பிரமணியன் சாமி

2016 பிப்ரவரி 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

2017 மார்ச் 21ஆம் தேதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெர் வழக்கை சமரசமாக முடித்துக் கொள்ளலாம் என்றார். ஏப்ரல் 19 பாரதிய ஜனதா தலைவர்களிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.

நீதிமன்றம் அனுமதி

ஆகஸ்ட் 7ஆம் தேதி மூன்று பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

ஆகஸ்ட் 8ஆம் தேதி உத்தரப் பிரதேச ஷியா மத்திய வக்பு வாரியம் மசூதி அமைந்திருக்கும் இடத்திற்கும் சர்ச்சைக்குரிய பகுதிக்கும் இடையே போதிய இடைவெளி உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நீதிபதிகள் நியமனம்

செப்டம்பர் 11 ஆம் தேதி இது தொடர்பாக கண்காணிக்க கூடுதலாக இரண்டு மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.

நவம்பர் 20ஆம் தேதி, உத்தரப் பிரதேச வக்பு வாரியம் கோயிலை அயோத்தியிலும் மசூதியை லக்னோவிலும் கட்டிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

டிசம்பர் ஒன்றாம் தேதி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 2010 தீர்ப்புக்கு எதிராக சமூக செயல்பாட்டாளர்கள் 31 பேர் வழக்குத் தொடர்ந்தனர்.

விசாரணை

2018 மார்ச் 14ஆம் தேதி சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோரின் இடைக்கால மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜூலை 6ஆம் தேதி, இஸ்லாமிய அமைப்புகள் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக உத்தரப் பிரதேச அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

செப்டம்பர் 27ஆம் தேதி ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

2018 மார்ச் 23ஆம் தேதி, 13 மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணையை நடத்த நீதிமன்றம் திட்டமிட்டது.

2018அக்டோபர் 29ஆம் தேதி, தலைமை நீதிபதி அயோத்தி வழக்குகளை பட்டியலிட உத்தரவிட்டார். அப்போது விசாரணையை எப்போது தொடங்குவது என்றும் விவாதிக்கப்பட்டது.

ஜனவரியில் விசாரணையை தொடங்கலாம் என்றும் அப்போது விவாதிக்கப்பட்டது.

மத்தியஸ்தர் நியமனம்

2019 ஜனவரி 4ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் ஜனவரி 10ஆம் தேதியிலிருந்து விசாரணையை தொடங்க உத்தரவிட்டது.

2019 ஜனவரி 25ஆம் தேதி, ராமஜென்ம பூமி வழக்கை தனது தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை நீதிபதி மாற்றினார்.

2019 பிப்ரவரி 4ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு அளிக்கப்பட்டது.

2019 பிப்ரவரி 26ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தரை ஆதரித்தது.

அறிக்கை சமர்ப்பிப்பு

2019 மார்ச் 6ஆம் தேதி, நிலத்தகராறு மத்தியஸ்தர் மூலமாகத் தீர்க்க முடியுமா? என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

2019 மார்ச் 8ஆம் தேதி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019 மே 9ஆம் தேதி, மூன்று பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு தனது இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

கால அவகாசம்

2019 மே 10ஆம் தேதி, மத்தியஸ்தர் குழுவுக்கு வழங்கப்பட்ட காலம் ஆகஸ்ட் 15ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது.

2019 ஜூலை 11ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தர் குழுவின் அறிக்கையை கோரியது.

ஜூலை 15ஆம் தேதி, எல்.கே. அத்வானி, ஜோஷி, உமா பாரதி, பலர் மீதான விசாரணையை முடிக்க நீதிபதி மேலும் ஆறு மாத காலம் அவகாசம் கோரினார்.

ஜூலை 18ஆம் தேதி, மத்தியஸ்தர் குழு நடவடிக்கை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

ஜூலை 19ஆம் தேதி, தீர்ப்பு அளிக்க ஒன்பது மாத காலம் நீதிபதி அவகாசம் வழங்கினார்.

144 தடை உத்தரவு

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, மத்தியஸ்தர் குழுவின் அறிக்கை உறையிட்டு மூடிய நிலையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் விசாரணை தொடங்கியது.

2019 அக்டோபர் 13ஆம் தேதி, அயோத்தி நிலப் பிரச்னை வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது. நான்கு நாள்களில் விசாரணையை முடித்துக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இதையடுத்து உத்தரப் பிரதேச அரசு அயோத்தியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது.

அடுத்த மாதம் தீர்ப்பு?

அக்டோபர் 14ஆம் தேதி, இஸ்லாமிய தரப்பு தங்களின் வாதத்தை நிறைவுசெய்து கொண்டது. இதையடுத்து இந்து தரப்பினர் இன்று தங்களது வாதத்தை நிறைவு செய்துகொண்டனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு அடுத்த மாதம் (நவம்பர்) 17ஆம் தேதிக்கு முன்னர் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |