வீடுகள், பாலம் போன்றவற்றை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் ஓடக்கொல்லி பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொது மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் காட்டு யானைகள் அப்பகுதியில் வசிக்கும் வெள்ளச்சி, ஜார்ஜ் குட்டி ஆகிய 2 பேரின் வீடுகளையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து காட்டு யானைகள் ஓவேலி பகுதிக்குள் நுழைந்து வாய்க்காலை கடப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு பாலத்தை உடைத்து சேதப்படுத்தி உள்ளது.
மேலும் காட்டு யானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தையும் மிதித்து நாசப்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும் போது, காட்டு யானைகள் கிராம பகுதிக்குள் நுழைந்து தினமும் அட்டகாசம் செய்கிறது. எனவே வனத்துறையினர் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் பொருட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.