வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 20.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 270 வீடுகளில் குடிநீர் வழங்கும் பணி மற்றும் 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட சாலைகள், மூலதன மானிய திட்டத்தின் கீழ் பெட்டுமந்து கிராமத்தில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை போன்றவற்றை ஆய்வு செய்துள்ளார். மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் மற்றும் அரசு அலுவலர்கள் போன்றோர் மாவட்ட கலெக்டர் உடன் இருந்துள்ளனர்.