காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வனத்துறையினர் அதனை புன்னம்பழா வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காட்டுயானைகள் நாடுகாணி, தேவாலா போன்ற பகுதிகளில் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளது. இதனால் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டு யானைகள் பிளமூலா வனப்பகுதியில் நின்று கொண்டிருந்தது. அப்போது கும்கி யானைகளின் உதவியோடு காட்டு யானைகளை வனத்துறையினர் புன்னம்பழா வனப்பகுதிக்குள் விரட்டியடித்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புன்னம்பழா மற்றும் நாடுகாணி தாவிரவியல் சுற்றுச்சூழல் பூங்கா வனத்தில் கும்கி யானையை நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து தேவாலா வனச்சரகர் பிரசாந்த் கூறும்போது, கடந்த சில நாட்களாக கொட்டும் மழையிலும் 30 ஊழியர்கள் 4 கும்கி யானைகளின் உதவியோடு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பலனாக காட்டு யானைகளை புன்னம்பழா வனப்பகுதிக்குள் விரட்டியடித்து விட்டோம். மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் பாண்டியாற்று வெள்ளத்தை கடந்து காட்டு யானைகள் திரும்பி வர வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.