பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பதை தடுப்பது தொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தை காங்கிரஸ் செல்வபெருந்தகை, ராமச்சந்திரன், மாரிமுத்து உள்ளிட்ட உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ஏழு வருடங்களாக ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு பொது சொத்துக்களை விற்க முயற்சி செய்து வருகிறது. அதன்படி, துறைமுகங்கள், விமான நிலையங்களை விற்க முயற்சி செய்து வருகிறது.
எனவே தமிழக முதல்வர் இதனை தடுத்து நிறுத்திய பொது சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுச் சொத்துகளை தனியார்மயமாக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. தனியார்மயமாக்கல் நடவடிக்கையின்போது மத்திய அரசு, மாநில அரசோடு கலந்தாலோசிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடங்களை மாநில அரசுதான் அளிக்கிறது என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் நம் அனைவருடைய சொத்து. லாப நோக்கத்திற்காக மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் மக்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் பொதுச் சொத்துக்களை விற்பது தேச நலனுக்கு உகந்தது கிடையாது. பொதுச் சொத்துக்களை விற்பதை எதிர்க்கும் வகையில் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.