மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக் கொன்றதால் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஜோகிர்கொட்டாய் பகுதியில் பன்றிகளை வளர்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னபாப்பா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு நாகராஜன் மற்றும் சக்திவேல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சக்திவேல் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். பின்னர் 2-வது மகன் நாகராஜன் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கு தனது மனைவி சின்னபாப்பாக்கும் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் முருகனுக்கும் சின்னபாப்பாக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அந்த தகராறில் முருகன் மனைவியை அடித்து கொன்று சாக்கு பையில் மூட்டையாக கட்டி வீட்டின் பின்புறம் உள்ள குழியில் புதைத்துள்ளார். பின்னர் நாகராஜன் தனது தந்தையிடம் தாய் இரண்டு நாட்களாக காணவில்லை என கேட்டுள்ளார். அப்போது நாகராஜனிடம் உனது தாயை கொலை செய்து விட்டேன் என முருகன் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜன் தனது அண்ணன் சக்திவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் புதைக்கப்பட்டிருந்த சின்னபாபாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் கூறும் போது எனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் எங்களுக்குள் தகராறு நடந்துள்ளது. இதில் கோபம் அடைந்ததினால் நான் அவளது கழுத்தை நெரித்து கொன்று சாக்கு பையில் மூட்டையாக கட்டி பன்றி கழிவுகள் கொட்டும் இடத்தில் குழிதோண்டி புதைத்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.