பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டில் லிமர் மற்றும் சென்ட்ரல் அண்டஸ் என்ற இரு நகரங்களையும் இணைக்கும் சாலை ஒன்று அமைந்துள்ளது. அந்த சாலை வழியாக 63 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஓன்று சென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்தப் பேருந்து மலைப்பாங்கான பகுதி வழியாக சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து இந்த சம்பவத்தை விசாரித்த அதிகாரிகள் கூறியதாவது ” பேருந்து மலைப்பாங்கான பகுதியில் அதிவேகமாக சென்றது தான் இந்த கோர விபத்துக்கான காரணம் ஆகும்” என கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை போன்று கடந்த இரு நாட்களுக்கு முன்பு மற்றொரு பேருந்து ஒன்றும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ஆற்றில் 2 படகுகள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.