நிலத்தகராறு காரணத்தால் மகன் தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் ஆசீர்வாதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜான்ஜோசப் மற்றும் அந்தோணிராஜ் என இரண்டு மகன்களும், செலின்மேரி மற்றும் பெர்னத்மேரி என இரு மகள்களும் உள்ளனர். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்ற ஜான்ஜோசப் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கூலி வேலை செய்துள்ளார்.
அப்போது தந்தை ஆசிர்வாதத்திடன் இருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தை தனக்கு பிரித்து தர வேண்டும் என ஜான்ஜோசப் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. இந்த தகராறில் தந்தை, மகன் இருவரும் உருட்டுக் கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆசீர்வாதம் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காயமடைந்த ஜான்ஜோசபை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு மருத்துவர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து ஆசீர்வாதத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து அந்தோணிராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜான்ஜோசப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.