கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக படிப்படியாக பாதிப்பு குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி கட்டாயமாக போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நீலகிரியில் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தடுப்பூசி போட்டிருக்கும் சான்றிதழ், ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே இனி மது வாங்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.