கொரோனா காரணமாக தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் ஆம்னி பேருந்துகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் 3 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் ஏசி வசதி இல்லாத 300 பஸ்கள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 50 சதவீதம் வரையில் தான் இருக்கைகள் நிரம்புகின்றன.
ஏசி பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. அப்படி அனுமதி வழங்கினாலும் இரண்டு வருடங்களாக பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் பராமரிப்பு பணிக்காக பஸ் ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாய்வரை செலவு செய்ய வேண்டி இருக்கிறது. அத்துடன் டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணம் அதிகரிப்பு ஆகியவற்றால் பழைய கட்டணத்தில் பேருந்துகளை இயக்குவது கடினம். அவ்வாறு இயக்கினால் பஸ் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் உரிமையாளர்களுக்கு நஷ்டம். ஏற்படும் எனவே பயணக் கட்டணத்தில் 30 சதவீதம் அதிகரித்தால் மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.